அரசகேசரி
- தென்கோவை, ச. கந்தையபிள்ளை -
செந்தமிழ், தொகுதி XII, பகுதி 3, சனவரி-பெப்ரவரி 1914
இவர் இற்றைக்கு முந்நூற்றைம்பது வருடங்களுக்கு முன் யாழ்ப்பாணத்திலிருந்த ஓர் அரசிளங்குமரரும், புலவர் பெருந்தகையுமாவர். முன்னாள் முச்சங்கங்கொண்டு தமிழைவளர்த்த பாண்டியர்கள்போல, நெடுங்காலமாக யாழ்ப்பாணத்திலிருந்து தமிழை வளர்த்த ஆரியச் சக்கிரவர்த்திகளது மரபில் உதித்தவர். வடமொழி தென் மொழிகளில் வல்ல வித்வன்மணிகளாகிய பரராசசேகரன், செகராசசேகரன் என்னும் மன்னர் பெருந்தகைகளுக்கு மருகர்.
இவ்வரசிளங்குமரர், வடமொழி தென்மொழிகளிலே தக்கபாண்டித்திய முடையரும், காவியசாத்திரவிநோதருமாயிருந்தமையால், இராச்சிய பரிபாலனசிரமமின்றிப் பிறிதொருமாளிகையின் கண்ணே தனித் துறைவாராயினர். இவர் வாசஞ்செய்த இடம் இப்பொழுது அரசகேசரிவளவு என்னும் பெயரால் வழங்கப்படுகின்றது. இது நல்லூரின்கண் உள்ளது. இவ்வாரியச்சக்கிரவர்த்திகள் நல்லூர் என்னும் இடத்தையே இராசதானியாக்கி அரசுபுரிந்தனர். இவர்களுடைய இராசமாளிகைகளும், பிறவும் இருந்த இடம் இப்பொழுது "சங்கிலிதோப்பு" என்னும் பெயரால் வழங்கப்படும் மிகப் பெரிய நிலப்பரப்பாகும். இவ்வம்சத்துக்கடைசியரசன் பரராசசேகரனது காமக்கிழத்தி மகனாகிய சங்கிலி என்பவனாதலின் இவ்விடம் அவன்பெயரால் வழங்கப்படுவதாயிற்று. இங்கே பழைய அரண்மனை வாயிற்கோபுரமும், கிலமடைந்த பழையமாளிகைகளது சுவர்களும், “யமுனா ஏரி" என்னும் முப்புடைக் கூபமும், பிறவும் காணப்படும். இவ்வரசர் வரலாறுகளும், இவர்கள் விரும்பியவாறு தொண்டைமண்டல முதலிய இடங்களிலிருந்து யாழ்ப்பாணத்தில் வந்துவசித்த வேளாளப்பிரபுக்களது வரலாறுகளும், பிறவும் "கைலாசமாலை", "யாழ்ப்பாணவைபவமாலை", ‘வையாபாடல்" முதலிய பழைய சரித்திர நூல்களிலே காணப்படும்.
பரராசசேகரன்,
செகராசசேகரன் என்பார், செந்தமிழ்ச்சங்கமொன்று தாபித்து,
தமது முன்னோர்போல, யாழ்ப்பாணத்திலே தமிழ்க்கல்வியை விருத்தி
செய்தனர். இவர் காலத்திலே யாழ்ப்பாணம் செந்தமிழணங்கிற்குத் திருவரங்காயிற்று என்பர்.
இவ்விருவரும் அக்காலத்திருந்த சங்கப் புலவர்களைக்கொண்டு பலநூல்களை இயற்றுவித்ததோடு,
தாமும் "பரராசசேகரம்,' ''செகராசசேகரம்" என்று தத்தம் பெயரால் ஒவ்வொருநூல் இயற்றினர். ‘பரராசசேகரம்" மிகச்சிறந்த வைத்திய நூல். இதிற்
சிற்சில பாகங்களே யாழ்ப்பாணத்துள்ள சிற்சில பரம்பரை வைத்தியர்களிடம் காணப்படுகின்றன.
மற்றைய "செகராசசேகரம்"
சோதிடநூல். இஃது அச்சிடப்பட்டுப்
பலராலும் படிக்கப்பட்டு வருகின்றது. ஏனைய சங்கப்புலவர் இயற்றிய நூல்களும்,
முன்னிருந்த சம்ஸ்தான வித்வான்கள்
இயற்றிய நூல்களும், யாழ்ப்பாணம்
போர்த்துக்கேய மன்னர் கைப்பட்ட பிற்றைநாட்களில் அன்னவர்
கொடுங்கோன்மையாற் சிதைந்துபோயின. இக்கொடுங்கோன் மன்னர் யாழ்ப்பாணத்துச்
சைவாலயங்களுக்கும், சமயாசாரத்துக்கும்
விளைத்த தீமைகள் அளவிடற்கரியன. இவ்வாரியச்சக்கிரவர்த்திகளுக்கு
அமைச்சராயினாரெல்லாம் தமிழ்ப்புலமையினும் மிகச் சிறந்தோராவர். இவர்களுள் ஒருவர் பாடிய சில
வெண்பாக்கள் "யாழ்ப்பாணவைபவமாலை"
என்னும் நூலிற் காணப்படும் ‘அடி யார்க்குநல்லாரும் இவ்வமைச்சருள்
ஒருவர்’ என்பர். இவர்,
செந்தமிழ்ப்பரிபாலனத்திலும், தமிழ்ப்புலமையிலும் சிறந்த குணபூஷண
சிங்கையாரியச்சக்கிரவர்த்திக்கு அமைச்சராயிருந்தவர். இத்துணைப்
பெருஞ்சிறப்பினையுடைய இவ்வாரியச்சக்கிரவர்த்திகளதுமரபில் உதித்த அரசகேசரியார்,
தமது மாதுலராகிய
பரராசசேகரமகாராசாவுடைய அநுமதப்படி, வடமொழியிலே
காளிதாசமகாகவி இயற்றிய இரகுவம்சம் என்னுங்காவியத்தைத் தமிழிலே பாடினர். அது
பின்வரும் செய்யுட்களால் அறியப்படும்.
வன்றிசைக்காளிதாசன்வடமொழி
தென்றிசைத்தமிழானனிசெப்புகேன்
நன்றிசைக்குமுறைவழிநன்னெடுங்
குன்றிசைப்பதுபோலுங்குறிப்பரோ,
இன்னகாதையியன்றவிரும்பொருட்
டுன்னுசெஞ்சொற்றுகடபுதூய
நூல்
பன்னுசெஞ்சொற்பரராசசேகர
மன்னனின்பமனங்கொளவாய்ந்ததே. (இரகுவம்.பாயிரம் - அ;கூ)
இவர், இராசமாளிகைக்குச் சமீபத்திலே உள்ள ஒரு செந்தாமரை வாவியினருகே புதிதாக அமைக்கப்பட்ட ஒரு வைசித்திரியமான மாளிகையின் மேன்மாடத்து வீற்றிருந்து இந்நூலைப் பாடினார் என்பர். இத்தாமரைப்படுகர் "நாயன்மார்கட்டு" என்னும் இடத்திலுள்ளது. இவ்விடம், முன் அடியார்க்குநல்லார் என்னும் புலவர் திலகரால் அறுபான்மும்மை நாயன்மாருக்குத் திருமடம் அமைத்து மாகேசுரபூசை செய்விக்கப்பட்டு வந்தமையால், பிற்றைநாளில் "நாயன்மார்கட்டு" என வழங்கப்படுவதாயிற்று. இந்நூலின்கண் இடையிடையே காணப்படுகின்ற கற்பனாலங்காரமமைந்த சில செய்யுட்களும், இவர், செந்தாமரைப்படுகரின் பாங்கரிலிருந்து பாடிய உண்மையை ஒருவாறு புலப்படுத்துவனவாகும்.
இட்டமெத்தியவெய்யவரிடுக்கண்வந்திறுத்தால்
முட்டவத்தலைப்பகைவராகுவரெனமுன்னோர் பட்டுரைத்தனகாட்டுமாபானுவாற்பரியுங்
கட்டகட்டலைக்கொட்டைவான்சரோருகக்களையே.
பச்சடைப்பதுமத்தாதிபாங்குறப்பாய்காற்பாணி
நிச்சயமருத்துச்செய்ய
நீலங்கணெக்குநோக்க
அச்சிலதேரை
வாய்விட்டரற்றமெல்லணையினாய
கச்சபவெரின் மீதேறிக்கம்புசூல் கழிக்குமன்னோ. (நாட்டுப்ப - 25 - 46)
இந்நூல்,
சொல்லணி பொருளணிகள் நிரம்பி, அரிதினுணர் தற்பாலனவாகிய
சொற்றொடர்களும், சொற்களும்
மலியப்பெற்று விளங்குகின்றது. இந்நூலிற்காணப்படும் பிரயோகங்களும், பிறவும் நூலாசிரியர் வடநூல்களிலும், தொல்காப்பியம், சிந்தாமணி,
சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதலிய
தமிழ்நூல்களிலும் மிக்க பரிசயமுடையார் என்பதை நன்கு புலப்படுத்தும். பாயிரச்செய்யுட்கள் கம்பராமாயணப்
பாயிரச்செய்யுட்களது போக்கும் நோக்கும் உடையன. ஆற்றுப்படலச்செய்யுட்களும், நாட்டுப்படல நகரப்படலச்
செய்யுட்களும், விநோதம் பயப்பனவாக
அமைக்கப்பட்டுச், சிலேடை
முதலிய பலபொருளணிகளுக்கு இடனாய், ஆன்றபொருள்
தந்து பொலிகின்றன. நாட்டுப்படலத்திலே, திணைமயக்கம், மற்றைய
காவியப்புலவர்களிலும் மிகவிநோதமாகப் பாடப்பட்டுள்ள தென்பது அச்செய்யுட்களை நுண்ணிதின்
ஆராயுமிடத்துப் புலப்படும். திக்குவிசயப்படலத்திலுள்ள அநேக செய்யுட்கள், கற்பனாலங்காரங்களை யெல்லாம்
நன்றிசைக்குமுரைவழி நன்னெடுங் குன்றிசைப்பதுபோல முதனூலில் இருந்தவாறே நன்கு தெரித்து நிற்பன.
சீதைவனம்புகு படலத்திலுள்ள செவ்விய மதுரஞ் சேர்ந்த சீரிய செய்யுட்களும்,
அதற்குப் பின்னுள்ள மற்றைய படலச் செய்யுட்களும்
கம்பராமாயணத்துக் கூறப்படாது விடப்பட்ட அரிய விஷயங்களையெல்லாம்
எடுத்துக்கூறுவனவாகும். அது,
'கற்றார்கலியின் பெரிதாந் தமிழ்க் கம்பநாட
னுற்றாங்
குரைத்தா னுரையாதனவோது கிற்பாம்''
என்பதனானு
மறியப்படும் - (இரகு. திருவவ. ருசு)
இந்நூல்
யாழ்ப்பாணத்திலே பண்டைக்காலந்தொட்டு, ஆசிரிய மாணாக்க பரம்பரையாகக் கற்கப்பட்டு வருகின்றது. இற்றைக்கு நூறு வருடங்களுக்குமுன்
இருந்த இருபாலை நெல்லைநாத பண்டிதர், மாதகல் சிற்றம்பலப்புலவர் முதலிய
காவியப்புலமைவாய்ந்த பண்டிதர்கள் இந்நூலின்கண்ணே மிக்க பரிசயமுடையராய், இதனை அநேக மாணவர்களுக்குக் கற்பித்து வந்தார்கள்
என்பது கர்னபரம்பரை. நெல்லைநாத பண்டிதர் குமாரராகிய மஹாவித்வான் சேனாதிராய முதலியாரிடத்திலே
இந்நூலைக் கிரமமாகக் கேட்டுணர்ந்த நல்லூர் வித்வான் சரவணமுத்து முதலியார் என்பார், இதற்கு ஒரு பொழிப்புரை எழுதிவந்தனர்
என்றும், இடையிலே அவர்
சிவபதமடைந்து விட்டமையின்
அது பூர்த்தியாகவில்லை என்றும், அவ்வுரையிற்
பெரும்பாகம் அவரது மாணவர் சிலர்க்குப் பயன்படுவதாயிற்று என்றும்
இப்பொழுதைப் புலவர் சிலர் கூறுவர்.
இந்நூலிலே, "திக்குவிசயப்படலத்திலுள்ள கற்பனாலங்காரங்களமைந்த செய்யுட்களுள்ளே சிலவற்றை,
வடமொழி தென்மொழிகளில் வல்லார்
படித்து மகிழுமாறு,
அம்முதனூற் சுலோகங்களோடு எழுதுகின்றாம்.
கனைகழல்வீரனுங்காவலான்றரு
புனைமணிமுடியொடும்பொலிந்துதோன்றினான்
தினகரன்றிவாந்தகாலத்திற்சேர்த்திய
இனவொளியொடுகனலிலங்கிற்றென்னவே. (திக்குவி.க.)
நிமிர்தருமிசையினான்றன்னைநேர்ந்துமுன்
இமிர்தருபுகைக்கனலென்றுநோக்கிய
அமரிடுமதிபலவரசர்பின்னர்தந்
தமரொடுமடுஞ்சிகைத்தழலினோக்கினார். (திக்குவி. உ.)
இச்சையாங்கட்புலப்படாளென்றெண்ணினும்
நிச்சமாமன்னவனிறைந்ததேசெனுங்
கைச்சரோருகத்திடைவிளங்குங்கஞ்சமென்
பிச்சமேகொடுதிருப்பெரிதுபேணினாள். (திக்குவி. ங.)
குருதிநாறொளிறுவேன்மன்னன்கொற்றமே
கருதிநாவலர்தநாவுறைந்துகாமரு
பரிதிநாண்மலர்ப்பொகுட்டுறையும்பார்தரு
சுருதிநாயகன்மயிறுதிப்பதாயினாள். (திக்குவி. ச.)
ஒறாமனுமுதலியமன்னரொண்புய
மறாதடைந்திடினுமொர்காலுமன்றலைப்
பெறாளெனப்புதுமணம்பெற்றபெற்றியின்
நறாமலர்ப்புயம்புவிமங்கைநண்ணினாள். (திக்குவி.
ரு)
விறன்மிகும்படைதொடர்ந்திடக்கீட்டிசைவேலை
திறனினோக்குபுசென்றிடுந்திங்கள்வெண்குடையோன்
பெறலருந்தவப்பெற்றியின்வரநதிபின்னர்
உறநடந்திடும்பகீரதன்றன்னையுமொத்தான். (திக்குவி.ருசு)
வீறுபட்டுடையதானைவேந்தனால்வீயாவீயும்
ஊறுபட்டுடைந்துமீளவுய்ந்துளமன்னரெல்லாம்
சேறுபட்டைம்பூகல்குஞ்செய்யிடைப்பறித்துமீள
நாறுபட்டனபைங்கூழினன்பலநல்கினாரே. (திக்குவி.
சுஅ )
சுலோகத்துள்ள
சிலேடைப்பொருளமைந்தபாகங்களெல்லாம் இச்செய்யுளில் நன்குவிளக்கப்பட்டமை காண்க.
அத்தலையரசர்கோமானதோரணரடக்குவான்செங்
கைத்தலத்தெடுத்தவள்வாயங்குசங்கந்துசீறும்
பித்திவர்மத்தமாவின்மத்தகம்பிறங்கிற்றென்ன
வைத்தனன்விசயச்சின்னமயேந்
திரத்துச்சிமாதோ. (திக்கு.எக)
மாவீரவெழி
என்பது யானை விசேடம்.. அது பாகன்சொல்லைப் பொருட்படுத்தாத இயல்புடையது. இரத்தம்
ஒழுகும்படி தோலைப்புண்படுத்தியவிடத்தும்
நிலைதளம்பாது நிற்பது. அதன் மத்தகத்திலே அங்குசத்தை நாட்டுதல் மிக
அரியசெயலாயிருத்தல் போல்,
இரகுவும் வலியமகேந்திரத்துச்சியில்
தன்பிரதாபத்தை நாட்டியது மிக' அரியசெயல்
என்பது கருத்து. இச்செய்யுளிலே "கந்து சீறும் பித்திவர்மதமா" என்பதனால் மாவீரவெழி என்பது விளக்கப்பட்டது.
மிடறொகாவுயர்
பரிவெள்ளத்தின்குரம்
இடறவேலஞ்சிதைந்தெழுந்த
நுண்பொடி
அடறவாமதமண
மடங்கவானையின்
கொடிறுவார்கரடமதடைத்தல்
கூடுமே. (திக்குவி. கஉo)
அடல்
ஈண்டுத் துல்லியகந்தமுடைமையை உணர்த்திநின்றது.
ஆங்கொளிச்சரளத்திற்பிணித்தவானையின்
பூங்கதிர்ச்சங்கிலியதனிற்போகிய
ஓங்கெரிமரத்தடஞ்சுடர்களோவற
வீங்கிருளிரவிற்கே
விளக்கமாகுமே. (திக்குவி. உருஎ)
அன்னவர்விழவையச்சமரினோடழித்து
உன்னியவிழவிலராக்கியொண்புகழ்
கின்னரர்பாடவுண்மகிழ்ந்துகேட்டனன்
தன்னிகரிலாவடற்றானைவீரனே. (திக்குவி.
உகக)
இமயமலைவாசிகள்
கவலை சிறிதுமின்றி என்றும் மகிழ்ச்சியேயுடையராதலின் உத்சவசங்கேதர் எனப்பட்டார்
என்பர். இதற்கு முந்திய செய்யுளிலே 'உத்சவசங்கேதர்" என்பது
கூறப்பட்டமையால் இங்கே "அன்னவர்"
எனச் சுட்டியொழிந்தார்.
சீற்றமிற்றன்னவர்திறைசொரிந்தனர்
சாற்றருமன்னற்குஞ்சயிலநாதற்கும்
மாற்றரும்பெருந்தனவளர்வும்
வெஞ்சமர்
ஆற்றலுந்தனித்தனியறியப்பட்டவே. (திக்குவி.
உகூஉ)
வித்தகவம்மலைநின்றுவெம்முடி
பத்துளனாலெடுபட்டவெள்ளிவெண்
அத்திரிதனிற்புகாததற்குநாணினை
வைத்திடுவான்புகழ் வாய்ப்ப
மீள்வுறா. (திக்குவி. உகூகூ)
இன்னும்
இவைபோல முழுவதும் மொழிபெயர்ப்பாக அமைந்தனவும், முதனூற்சுலோகங்களின் சிற்சிலபாகங்களே
மொழிபெயர்த்துப் பாடப்பட்டனவுமாக இடையிடையே காணப்படுஞ் செய்யுட்களும் பல.
அவையெல்லாம் அவ்விருநூல்களையும் ஒருங்குவைத்து இலைப்புரைகிளைப்பார்க்கு எளிதிற்
புலப்படுவனவாகும். குசன் அயோத்திசெல்படலம், குலமுறைப்படலம் என்பவற்றிலுள்ள செய்யுட்களுள்ளே
மடக்கு என்னும் சொல்லலங்காரவகைகள் அமைத்துப் பாடப்பட்டனவும் பல. அவற்றையும்,
மாலையீட்டுப்படலம், கடிமணப்படலம் என்பவற்றிலுள்ள
கற்பனாலங்காரங்கள் மலிந்த மற்றைய செய்யுட்களையும் படித்து மகிழ்தல் வடமொழி தென்மொழிகளில் வல்ல பண்டிதர்கள்
கடன். ஈண்டுவிரிப்பிற் பெருகும். குலமுறைப் படலத்துக்குப் பின்னுள்ள வரலாறுகளும்
இவராற் பாடப்பட்டுள்ளன என்பது கர்னபரம்பரை. அவைகளும் மற்றையநூல்கள் போலப்
பிற்றைநாளிற் சிதைந்தனபோலும். பின்வரும் குலமுறைப் படலத்திறுதிச் செய்யுளும் அங்ஙனம் பாடப்பட்ட
உண்மையை நன்குபுலப்படுத்தும்.
கலைப்படாநின் றவிக்குவாகு வின்மரபின்காட்சித்
தலைப்படாநின்றவேந்தர் தம்பெருந்தகையநீதி
வலைப்படானாகிநல்லோரறிவெனும் வாய்மைதன்னுள் நிலைப்படாவிவன்றன்
வெய்யநீர்மையைநிகழ்த்துகிற்பாம்.
இந்நூல்
இப்பொழுதும் யாழ்ப்பாணத்திலே, வடமொழி தென் மொழிகளில்
வல்லபண்டிதரும், பரோபகாரப்பண்பினருமாகிய
சுன்னாகம் ஸ்ரீ அ.
குமாரசுவாமிப்புலவராலும், பிறராலும்
கற்பிக்கப்பட்டு வருகின்றது. புலவரவர்கள் 'இரகுவம்மிசக்கருப்பொருள்' என்னும் பெயரோடு, இந்நூலிலுள்ள
சில அருஞ் செய்யுள்களுக்கும், அருந்தொடர்களுக்கும்
பொருளெழுதி வெளியிட்டுமுள்ளார்கள்.
இதுகாறுங்கூறியவாற்றால்,
அரசகேசரி யென்னும் புலவர்
பெருந்தகையினது வமிசவரலாறும், அவர் பரம்பரையினராகிய
ஆரியச்சக்கிரவர்த்திகளது செந்தமிழ்ப்பரிபாலனச் செயல்களும், அவர் இபற்றிய இரகுவம்மிசம் என்னும்
பெருங்காப்பியத்தினது சிறப்புக்களும், அவரது வடமொழி தென்மொழிவன்மையும், பிறவும் சிற்றறிவிற்கெட்டியவளவில் ஒருவாறு
விளக்கப்பட்டன.
இங்ஙனம்,
தென்கோவை,
ச. கந்தையபிள்ளை
கொழும்பு.